ரூ.30 ஆயிரம் மோசடியில் சிக்கிய சாரதா சிட் பண்டு அதிபரை காவலில் எடுக்க திட்டம் முதல்வர் கோகய் பேட்டி
கவுகாத்தி: மேற்கு வங்கத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த சாரதா சிட் பண்டு நிறுவன அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க அசாம் போலீஸ் முடிவு செய்திருப்பதாக மாநில முதல்வர் தருண் கோகய் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்டு நிறுவனம் கடந்த மாதம் திவாலானது. சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிட் பண்டு அதிபர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்களின் கோபம் மற்றும் அவமானம் தாங்காமல் இதுவரை 6 ஏஜென்ட்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாரதா சிட் பண்டு நிறுவனத்துக்கு அண்டை மாநிலங்களான ஒடிசா மற்றும் அசாமிலும் நூற்றுக்கணக்கான கிளைகள் இருந்தன. இவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சீட்டு போட்டிருந்தனர். மேற்கு வங்கத்தை தொடர்ந்து இந்த மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்டு கிளைகளும் இழுத்து மூடப்பட்டன.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்டு பிராந்திய கிளைக்கு அந்த மாநில போலீஸ் கடந்த வாரம் சீல் வைத்தது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பொது மக்களின் பணத்தை மோசடி செய்ததாக சாரதா சிட் பண்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவன அதிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று கொல்கத்தா விரைந்துள்ளது. கொல்கத்தா நீதிமன்ற அனுமதியுடன் நிறுவன அதிபரை கைது செய்து அசாம் கொண்டு வர போலீசார் திட்டமிட்டிருப்பதாக மாநில முதல்வர் தருண் கோகய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.