லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி மகனை கடத்தி சென்றது, பஞ்சாப் தலிபான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவரை தேடும் பணியில் பல்வேறு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.
பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் மற்றும் பஞ்சாப் உள்பட 4 சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் (27) போட்டியிடுகிறார். இவர் லாகூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள பிரபல முல்தான் மாவட்டத்தில் பரூக் டவுண் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று பைக்குகளில் விரைந்து வந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அலி ஹைதரின் பாதுகாவலர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்னர் அலி ஹைதரை கடத்தி சென்றனர். அவர்கள் எங்கிருக்கிறார், கடத்தியது யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அலி ஹைதரை கடத்தியதற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ள பஞ்சாப் தலிபான் தீவிரவாதிகள்தான் அலி ஹைதரை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அவரை மீட்க ராணுவம், போலீசார், புலனாய்வு துறையினருக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார். மேலும், அலி ஹைதர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு கணிசமான தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது. கிலானிக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.