அரசு ஊழியர்களுக்கு சீருடை ஆபீசில் ஏசி பயன்படுத்த தடை பாக். பிரதமர் அதிரடி திட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாளை மறுநாள் (11&ம் தேதி) நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளது. மின் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தேர்தலுக்கு பிறகு பல அதிரடி முடிவுகளை எடுக்க பிரதமர் மிர் ஹசார் முடிவு செய்துள்ளார். மே 15&ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் ஏசி பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கவும், அரசு அலுவலர்கள் சீருடை அணிந்து வேலைக்கு வர வேண்டும் என உத்தரவிடவும் பிரதமர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமாபாத்தில் 8 மணி நேர மின் தடையும், கிராமப்புறங்களில் 18 மணி நேர மின் தடையும் அமலில் உள்ளது. மின் உபயோகத்தை குறைக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் ஏசி பயன்படுத்த தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அரசு அலுவலர்கள் சீருடை அணிந்து பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் வெள்ளை அல்லது லேசான கலர் சட்டை, பேன்ட்டும், பெண்கள் சல்வார் கமீஸ், வெள்ளை கோட் அணிய வேண்டும். லேஸ் இல்லாத ஷூ, சந்தன கலர் ஷாக்ஸ் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடவும் பிரதமர் முடிவு செய்துள்ளார்.