உளுந்தூர்பேட்டை அருகே கோயில் குளத்தில் விஷம்? மீன்கள் செத்து மிதந்தன
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே முருகன் கோயில் குளத்தில் இன்று காலை மீன்கள் செத்து மிதந்தன. குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரும்பாக்கம் கிராமம். இங்குள்ள முருகன் கோயில் குளத்தில், மீன் பிடிக்கும் குத்தகையை அதே ஊரை சேர்ந்த செழியன் என்பவர் எடுத்து இருந்தார். விரால், கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் நன்கு வளர்ந்து பிடிக்கும் தருவாயில் இருந்தன.
இன்று காலை குளக்கரைக்கு சென்ற அப்பகுதி மக்கள், மீன்கள் செத்து மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து குளத்துக்க ஓடி சென்றார் செழியன். ரூ.2 மதிப்புள்ள மீன்கள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இக்குளத்தில் அப்பகுதி மக்கள் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிப்பது வழக்கம். அதிகாலையிலேயே குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது தெரிந்து விட்டதால் ஆடு, மாடுகளை குளப்பகுதிக்கு விடவில்லை. இதனால் கால்நடை இறப்பு தடுக்கப்பட்டது.
தகவலறிந்த திருநாவலூர் போலீசார், குளத்தில் விஷம் கலந்துள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.