தாகா: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டு தனி நாடாக பிரிக்கப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் பயங்கர போர் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். போரின் போது படுகொலைகள், கொள்ளை, பலாத்காரம், பிற மதத்தினரை முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மதம் மாற்றியது போன்ற பல சம்பவங்கள் நடந்தன. இதில் தற்போதைய ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போர் குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றங்கள் தடுப்பு டிரிபியூனல் விசாரித்து வருகிறது. நீதிபதி பாசல் கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், வழக்கை விசாரிக்கிறது. போர் குற்றங்கள் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முன்னாள் தலைவர் அபுல் கலாம் ஆசாத், பிப்ரவரியில் மூத்த தலைலர் அப்துல் காதர் முல்லா ஆகியோருக்கு டிரிபியூனல் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில், கட்சியின் துணை தலைவர் டெல் வர் உசைன் சயீத்துக்கு 20 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது. இவர் மீதான வழக்கை விசாரித்த டிரிபியூனல் நேற்று டெல்வருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து வங்கதேசத்தின் பல பகுதிகளில் பயங்கர கலவரம் வெடித்தது. முன்னதாக ஜமாத் இ இஸ்லாமி கட்சி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ஆயிரக்கணக்கானோர் தலைநகர் தாகாவில் கூடி டிரிபியூனல் தீர்ப்பை கண்டித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பு மோதலில் 3 போலீஸ்காரர்கள் உள்பட 32 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாகா, கைபந்தா, தகூர்கான், சட்கிரா, ரங்பூர், நோகாலி, சிட்டகாங், மவுல்வி பஜார், சிராஜ்கஞ்சச, தினாஜ்பூர், நடோர் உள்பட பல நகரங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இங்கு வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் உள்பட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.