தண்டையார்பேட்டை: குடிசை வீடுகளில் ஏற்பட்ட பயங்கர தீயில், மூதாட்டிகள் 3 பேர் உடல் கருகி இறந்தனர். கொடுங்கையூரில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சாலை பாப்பாத்தியம்மாள் தெருவில் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலி வேலை செய்கின்றனர். நேற்றிரவு குடிசைக்கு வெளியே சிலர் படுத்திருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் கோமதி என்பவர் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது. இதையறிந்ததும் தூங்கி கொண்டிருந்தவர்கள், குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டிகள் மீனாட்சி (65), சரோஜா (70), ராஜம்மாள் (70) ஆகியோரால் வெளியே ஓடிவர முடியவில்லை. இதனால் மூவரும் தீயில் கருகினர். தகவல் அறிந்ததும் எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். குடிசையில் சிக்கிய மூதாட்டிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிருக்கு போராடிய மீனாட்சி, சரோஜா, ராஜம்மாள் ஆகியோரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டிகள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் தீயில் காயம் அடைந்த கார்த்திக் (32), கோமதி (45), குபேரன் (34) குமார் (40), கோகிலா (35) ஆகியோர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீயில் கருகி நாய், 3 பூனைகள் இறந்தது. வீட்டில் உள்ள கட்டில், பீரோ, டிவி, மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த சகோதரிகள் திருபுரம், உண்ணாமலையம்மாள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக குடிசை வீட்டில் வாடகைக்கு இருப்போரை காலி செய்யும்படி மர்ம நபர்கள் சிலர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. குடிசை வீட்டின் அருகே நேற்றிரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். குடிசை வாசிகளை காலி செய்வதற்காக தீ வைக்கப்பட்டதா? சதி வேலையில் யாராவது ஈடுபட்டார்களா என்று விசாரணை நடக்கிறது. மூதாட்டிகள் தீயில் கருகி இறந்த சம்பவம் கொடுங்கையூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.