கூடுவாஞ்சேரி- தாம்பரம் அருகே அஸ்தினாபுரம் பிரார்த்தனை கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை, வாலிபர் கடத்தி சென்றார். சென்னை பீச் ரயில் நிலையத்தில் சிறுவனை தவிக்க விட்டு மாயமானவரை போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி கன்னிவாக்கம் அண்ணா நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கோபால கண்ணன் (எ) சீமோன் (35). கிறிஸ்தவ போதகர். கிராமத்தில் தேவாலயம் நடத்தி வருகிறார். மனைவி மாலினி (32). தம்பதிக்கு பாலின் பிரியா (10) என்ற மகளும், பால்டன் (7), பால்பேதுரு (4) என்ற மகன்களும் உள்ளனர். தாம்பரம் அருகே அஸ்தினாபுரம் தனியார் பள்ளியில் 4 நாட்கள் கன்வென்ஷன் பிரார்த்தனை கூட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. நேற்று கடைசி நாள் என்பதால் விசேஷ பிரார்தனை நடந்தது. விழுப்புரத்தை சேர்ந்த முருகன் (23) என்பவர் கன்னிவாக்கம் தேவாலயத்தில் தங்கி வேலை பார்த்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் ஆலயத்தில் இருந்து வெளியேறி விட்டார். இந்நிலையில் அஸ்தினாபுரம் பிரார்த்தனை கூட்டத்திற்கு முருகனும் வந்திருந்தார். அங்கு போதகர் சீமோன், அவரது மனைவி மாலினி ஆகியோர் முருகனை நலம் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் பிரார்த்தனை கூடத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பால்டனை, முருகன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசில் சீமோன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பால்டனை தேடி வந்தனர். நேற்றிரவு பீச் ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் அழுதபடி நின்றிருந்தான். அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ஜோசப், கார் வண்ணன் ஆகியோர் மீட்டு ரய¤ல்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடத்தப்பட்ட பால்டன் என்பது தெரிந்தது. இன்று காலை பெற்றோரிடம் பால்டனை போலீசார் ஒப்படைத்தனர்.
சிறுவனை, முருகன் எதற்காக கடத்தி சென்றார் என்பது தெரியவில்லை. தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தேடுகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.