திருமயம்: புதுக்கோட்டை அருகே இன்று காலை ரோட்டோரத்தில் நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதியதில் சென்னையை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர். சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராமு(35). பில்டிங் கான்ராக்டர். இவரது மனைவி சரஸ்வதி(27). இவர்களது மகன் தருண்(6). ராமுவின் நண்பர் முகப்பேர் புத்தூரை சேர்ந்த முருகன்(48). கொத்தனார். இவரது மனைவி உஷா(42). இவர்களது மகள்கள் யமுனா(16), சங்கீதா(12). முருகன், ராமு ஆகியோர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி கும்பிட வாடகை லோடு ஆட்டோவில் நேற்றிரவு 9.30மணி அளவில் புறப்பட்டு சென்றனர். லோடு ஆட்டோவை சென்னையை சேர்ந்த ஜார்ஜ்(42) என்பவர் ஓட்டிவந்தார்.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூர் விலக்கு ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது மினிடோர் ஆட்டோ மோதியது. இதில் மினிடோர் ஆட்டோ முன்பகுதி நொறுங்கியது. இதில் ஆட்டோவில் முன் இருக்கையில் பயணம் செய்த ராமு, உஷா, டிரைவர் ஜார்ஜ் ஆகியோர் அதே இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முருகன், சரஸ்வதி, தருண், யமுனா, சங்கீதா ஆகியோரை மீட்டு திருமயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook