மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு குட்கா ஏற்றுமதி செய்ய ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நேற்று முன் தினம் ஆந்திராவில் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் இன்னும் குட்காவுக்கு தடைவிதிக்கப்படவில்லை. இந்நிலையில் மும்பை துறைமுகத்தில் குவைத்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த குட்கா சரக்குகளை போலீசார் கடந்த மாதம் பறிமுதல் செய்தனர். ஆர்.எம்.தரிவால் என்ற பிரபல குட்கா தொழிலதிபருக்கு சொந்தமான குடோனில் இருந்து இந்த சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து தரிவால் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி மோகித் ஷா, நீதிபதி அனுப் மோத்தா அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. தரிவால் சார்பாக வக்கீல்கள் மிலந்த் சாத்தே, ஹிதேஷ் ஜெயின் ஆஜராகி, ÔÔதரிவால் குடோனிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா சரக்கு குஜராத்தில் தயாரிக்கப்பட்டது. இதற்கு அங்கு லைசன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இங்கு கொண்டுவரப்பட்டது. மகாராஷ்டிரா கொண்டுவந்துள்ள குட்கா தடை சட்டத்தில் குட்கா ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படவில்லை என வாதிட்டனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் டேரியஸ் கம்பாட்டா ஆஜராகி, ஏற்றுமதிக்காக மும்பை கொண்டுவர அனுமதித்தால், அது உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த ஒரு முறை மட்டும் மும்பையிலிருந்து வெளிநாட்டுக்கு குட்கா ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறோம். இனிமேல் மகாராஷ்டிர மாநிலத்துக்குள் எந்த காரணத்துக்காகவும் குட்காவை கொண்டுவரக்கூடாது என உத்தரவிட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook