இரவில் தனியாக நிற்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்துடன் தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள். காதல் ஜோடியை பார்த்தாலும் அப்படித்தான். காதலனை அடித்து விரட்டி விட்டு, காதலியை அடைய பார்க்கிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதிலும் குடிபோதையில் இருந்தால், கேட்கவே வேண்டாம். திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய காதல் ஜோடியை தாக்கிய கும்பல் பலாத்காரத்துக்கு முயன்றுள்ளது. தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறி அந்தக் கும்பலிடம் இருந்து தப்பியுள்ளார் காதலி. சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வருகின்றனர்.
ராஜாரெட்டி, தனது காதலியுடன் பைக்கில் திருப்பதி சென்றுவிட்டு, இரவு பாகராபேட்டை வனப்பகுதி வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைக்குகளில் 4 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை பார்த்ததும் பைக்கை நிறுத்தினர். திடீரென ராஜாரெட்டியை சரமாரி அடித்து உதைத்தனர். இளம்பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த இளம்பெண் உஷாரானார். ‘என்னை விட்டுவிடுங்கள். எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது’ என்று அழுதார். ஏமாற்றமடைந்த ஆசாமிகள் அந்த பெண்ணையும் சரமாரியாக அடித்தனர்.
பின்னர், இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு பெண்ணின் கம்மல், செயின் உள்பட 3 சவரன் நகைகளையும், ராஜாரெட்டி பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பினர். அலறல் சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள் வந்து, காதல் ஜோடியை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் பைக்கில் வந்த 4 ஆசாமிகளையும் தேடிவருகின்றனர். டெல்லி சம்பவம் போல் இருக்கும் இதில், புத்திசாலித்தனமாக தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக அந்தப் பெண் சொன்னதால், அடி, மிதியோடு தப்பிவிட்டார். இல்லாவிட்டால் அவர் வாழ்க்கை சின்னாபின்னாமாயிருக்கும். காதலிக்கும்போது, காதலனோடு தனியாக போவது பாதுகாப்பில்லை என்பது போல் நிலைமை மாறி வருகிறது. நாலு பேர் சேர்ந்து தாக்கும்போது, ஆள் அரவமில்லாத தனியான இடத்தில் காதலன் என்ன செய்ய முடியும்? சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு தனிமையை நாடிப் போனால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை காதலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.