இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டி தொடரை 21 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடந்த இரண்டு 2020 கொண்ட தொடரை சமனில் முடித்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக தாயகம் சென்ற இங்கிலாந்து அணி தற்போது 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் இந்தியா வந்துள்ளது. தொடரின் முதல் ஆட்டம் ராஜ்காட்டில் நாளை காலை 12 மணிக்கு நடக்கிறது. ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டெஸ்ட் போட்டி தொடர் தோல்விகள், 2020ல் சோபிக்காதது, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி என அடுத்தடுத்து கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இந்த ஒருநாள் போட்டி தொடரும் சவாலாகவே இருக்கும்.
அணியின் பந்துவீச்சு சிறிது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இளம்வீரரான புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். ஷாமி அகமது உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் கைகொடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி தரலாம். தொடக்க பேட்டிங்கில் காம்பீர் ரகானே பொறுப்புடன் ஆடினால் சிறப்பான ஸ்கோரை எடுக்க முடியும். புஜாராவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அவர் களமிறங்கினால் ரோகித்சர்மா இடம்பெற மாட்டார். கடந்த ஆண்டில் ரன்வேட்டையாடிய கோக்லி சமீப காலமாக சொதப்பி வருகிறார்.
ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோரும் அவசரப்பட்டு ஆடி விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். இதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த அணியாக திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க முடியும். 2 பயிற்சி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆன்டர்சனுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு சிறிது பின்னடைவு தான். எனினும் கிறிஸ்பிராடு, ஸ்டீவன்பின் மிரட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். பேட்டிங்கில் குக், பீட்டர்சன், இயான்பெல், மோர்கன், ரூட், கீஸ்விட்டர் சவாலாக இருப்பார்கள்.