வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவது குறித்து அதிபர் கர்சாயும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படையில்
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல நாட்டு படைகள் உள்ளன. தீவிரவாதிகளின் தாக்குதல்களால் நேட்டோ படை வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். மேலும், ஆப்கனை
விட்டு நேட்டோ படைகள் வெளியேற வேண்டும் என்று தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் ராணுவம் மற்றும் போலீசாரிடம் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்து விலக வரும் 2014ம் ஆண்டு இறுதிக்குள் படைகள் முழுவதையும் வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து, பிரான்ஸ் படைகள் ஏராளமாக ஆப்கனை விட்டு வெளியேறி உள்ளன.
அமெரிக்க படைகளும் கணிசமாக விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தை எங்கு நடக்கிறது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஆப்கனை விட்டு நேட்டோ படைகள் விலகினால், தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி விடும். ஆப்கனின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விடும். நிலைமை மோசமாகி விடும் என்று பல தரப்பினரும் எச்சரித்துள்ளனர். எனினும், ஆப்கன் அரசு அமைதி பேச்சுவார்த்தை குழுவினரும் தலிபான் தீவிரவாத பிரதிநிதிகளும் பாரிசில் கடந்த மாதம் சந்தித்தனர். அப்போது ஆயுதங்களை கைவிடுவது பற்றியும் ஆப்கனில் அமைதியை கொண்டு வருவது குறித்தும் இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினர். எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook