கண்டதும் காதல் செய்கிறார்கள். அதே வேகத்தில் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் திருமணம் ஆன 6 மாதத்தில் விவாகரத்து, புதுப் பெண் தற்கொலை, புது மாப்பிள்ளை தற்கொலை போன்ற செய்திகள் வருகின்றன. யாரோ இருவர் திருமண பந்தத்தில் இணையும்போது, அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜமான ஒன்று தான். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போய்விட்டால் எந்த பிரச்னையையும் தாண்டி சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். அல்லது பேசி புரிய வைக்கலாம். இந்த இரண்டுமே செய்யாமல் விரக்தி அடைந்து விடுகிறார்கள் சிலர். சென்னையில் திருமணம் ஆன இரண்டே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவேற்காடு தேவி நகரை சேர்ந்தவர் பேரரசன். பிஏ பட்டதாரி.
திருவேற்காடு அடுத்த வேலப்பன் சாவடியில் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். வேலப்பன்சாவடி நூம்பல் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி மதுமிதா என்பவரை காதலித்து 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதி தனியாக வசித்து வந்தனர். நேற்று முன் தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மதுமிதா கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பேரரசன், பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரும்பியவளை திருமணம் செய்வது முக்கியமில்லை. அவருடன் காலம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும். சண்டையில் கிழியாத சட்டை ஏது? பிரச்னை வராத குடும்பம் ஏது? பிரச்னை வந்தால் பேசித் தீர்க்க வேண்டும். முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். அதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் பிரச்னை தெரிந்து அதை விசாரித்து நல்லமுறையில் தீர்த்து வைப்பார்கள். இப்போது தனிக் குடித்தனங்கள் பெருகி விட்டதாலும் ஆண், பெண் இருவருக்குமே ஈகோ தலை தூக்குவதாலும் சிறிய சண்டை கூட பெரிய மன வருத்தத்தில் முடிகிறது. மன வருத்தம் உளைச்சலில் முடிந்து வாழ்க்கையை வீணடித்து விடுகிறது.