விளையாட்டுகள் சில நேரம் விபரீதமாவதுண்டு. ஆனால், விபரீதம் ஏற்படுத்தும் என்று தெரிந்தே பல உயிர்களோடு விளையாடுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. புத்தாண்டை மாமியார் வீட்டில் கொண்டாட மனைவி, மகளுடன் பைக்கில் சென்ற சாப்ட்வேர் நிறுவன ஊழியரின் உயிரை மாஞ்சா நூல் கொடூரமாக பலி வாங்கிவிட்டது. கண்ணெதிரே கணவன் கழுத்து அறுந்து துடிதுடித்து இறப்பதை பார்த்த மனைவியின் கதறல் சத்தம், பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
சென்னை மந்தைவெளி வன்னியம்பதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயகாந்த் (34). சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மனைவி மாலா (29). தம்பதிக்கு ஒன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. புத்தாண்டை கொண்டாட மனைவி, குழந்தையுடன் நேற்று மாலை 4 மணிக்கு புளியந்தோப்பில் உள்ள மாமியார் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார் ஜெயகாந்த். குழந்தையை மடியில் வைத்தபடி, மாலா பைக் பின்னால் அமர்ந்திருந்தார்.
பல்லவன் சாலை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகே சென்ட்ரல் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. பாலத்தை ஒட்டியுள்ள குடிசை பகுதியில் இருந்து பறக்க விடப்பட்ட காற்றாடி மாஞ்சா நூல், ஜெயகாந்த் கழுத்தில் சிக்கியது. சுதாரிப்பதற்குள் கழுத்தை அறுத்துவிட்டது மாஞ்சா நூல். அதன் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள போராடியும் பயனில்லை. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. தலை தொங்கிய நிலையில் பைக்குடன் சரிந்து விழுந்தார். குழந்தையுடன் மாலாவும் மறுபக்கம் விழுந்தார். போலீசார் வந்து ஜெயகாந்தை மீட்டு பக்கத்தில் இருந்த அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்த 10 நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
ரோட்டில் செல்வோரின் உயிருக்கு எமனாகும் மாஞ்சா நூலுக்கு போலீஸ் தடை விதித்துள்ளது. ஆனால், பல விஷயங்களை போலவே, மாஞ்சா நூல் விவகாரத்திலும் தடை மீறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும்போது மட்டுமே போலீசார் விழித்துக் கொள்வார்கள். ஒரு வாரத்துக்கு கண்காணிப்பு, நடவடிக்கை என்று சுறுசுறுப்பு காட்டுவார்கள். அதன்பிறகு, தடையை அவர்களும் கண்டுகொள்வதில்லை. மக்களும் திருந்துவதில்லை. டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடுமையை தொடர்ந்து, பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேபோல, உயிர் பலி வாங்கும் மாஞ்சா நூல் விவகாரத்திலும் கடுமையான தண்டனைக்கு அரசு வழி வகுக்க வேண்டும்.