திருவனந்தபுரம் மதுக்கடையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் மே.வங்கத்தை சேர்ந்த 2 பேர் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மதுக்கடையில் 1000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்க வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. திருவனந்தபுரம் ஓவர் பிரிட்ஜ் அருகே உள்ள மதுபான கடைக்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் மது வாங்க சென்றார். ரூ.150-க்கு மதுபாட்டில் வாங்கிய அவர் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த நோட்டை பார்த்து சந்தேகமடைந்த ஊழியர்கள், வாலிபரை பிடித்து திருவனந்தபுரம் தம்பானூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர் கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடந்த சோதனையில் மேலும் 3 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பப்லு அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளி ஆனந்த் மண்டல் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று இதுவரை ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட இருவருக்கும் கள்ளநோட்டு கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருவரையும் தீவிர விசாரணைக்கு பின்னர் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.