இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் : எம்எல்ஏ மகன் மீது பரபரப்பு புகார்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பசய்ரா கிராமத்தில் வசிப்பவர் ஷீலா (17). கடந்த சில தினங்களுக்கு முன்பு நயீம், நவ்மான் உள்பட 3 வாலிபர்கள் கிராமத்துக்கு வந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஷீலாவை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர். அங்கு ஷீலாவை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். 3 வாலிபர்களில் நயீம் என்பவர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மவுலானா ஜமீல் அகமத்தின் மகன். நவ்மானும் எம்எல்ஏவின் உறவினர்தான். பலாத்காரம் பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு 3 பேரும் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எம்எல்ஏ மகன் நயீம் உள்பட 3 பேர் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.