கூடுவாஞ்சேரி: குடிசை வீட்டில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டனர். வண்டலூர் அருகே இன்று காலை நடந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர் ராகவேந்திரா தெருவில் குடிசை வீடுகள் உள்ளன. இன்று காலை 11 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் வந்தது. சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது, குடிசைக்குள் வாலிபர்கள் 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்ஐக்கள் சித்ரா தேவி, லூர்து சாமி, அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணையில், குடிசை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் குமரேசன் (30), தீனதயாளன் (27) என்பது தெரிய வந்தது. இருவரும் நண்பர்கள். இன்று காலை குடிசை வீட்டில் குமரேசன், தீனதயாளனுடன் சேர்ந்து ஒரு கும்பல் மது குடித்ததாக தெரிகிறது. அதன் பிறகு அந்த கும்பல் போதையில் இருந்த ஆட்டோ டிரைவர்களின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. கொலை நடந்த குடிசை வீட்டை போலீசார் பூட்டினர். கடந்த ஆண்டு ஓட்டேரி கஞ்சா முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரேசன், தீனதயாளன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பழி வாங்கும் நடவடிக்கையில் இந்த கொலை நடந்ததா? போதையில் நடந்த தகராறா? அல்லது பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா என்று பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் 2 பேரின் சடலங்களை மீட்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வண்டலூர் அருகே நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook