திருப்பதி: திருப்பதியில் அடுத்த மாதம் 27ம் தேதி முதல் 3 நாள் நடைபெறும் உலக தெலுங்கு மாநாட்டை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார். திருப்பதியில் ஆந்திர மாநில கலைத் துறை இயக்குனர் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதியில் வரும் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் 4வது உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கு ஆந்திர அரசு ரூ.25 கோடி ஒதுக்கி உள்ளது. இம்மாநாடு திருப்பதி அடுத்த அவிலாலா ஊராட்சி ராஜீவ் நகர் பகுதியில் நடக்கிறது. இதற்காக 90 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. 1975ம் ஆண்டு ஐதராபாத்தில் முதல் மாநாடு நடந்தது. அதைத் தொடர்ந்து 1980ல் 2வது மாநாடு கோலாலம்பூரிலும், 1990ல் மொரீசியஸ் நாட்டில் 3வது மாநாடும் நடைபெற்றது. இந்நிலையில், 4வது மாநாடு 1995ல் தென்ஆப்பிரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் ரத்தானது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பதியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் கலெக்டர் சாலமன் ஆரோக்கியராஜ், திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த மாநாட்டை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைக்கிறார். வெளிநாட்டில் வசித்துவரும் தெலுங்கு மொழி பேசுபவர்களில் 292 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook