ஆங்கில புத்தாண்டில் தரிசிக்க திருப்பதியில் 7ம் தேதி டிக்கெட் வினியோகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை 2013 ஆங்கில புத்தாண்டு நாளில் தரிசனம் செய்ய ரூ.50 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 7ம் தேதி வினியோகம் செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், வரும் 2013 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 2013 புத்தாண்டு தரிசனத்துக்கென ரூ.50 கட்டண டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் இ தர்ஷன் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. வரும் 7ம் தேதி காலை முதல் நாடு முழுவதும் உள்ள இ,தர்ஷன் டிக்கெட் மையங்களில் வழங்கப்படும். குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் அன்று ஒருநாள் மட்டுமே வழங்கப்படுவதால், விரும்பும் பக்தர்கள் அதை பெற்றுக்கொள்ளும்படி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.