புதுடெல்லி: பொதுமக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களில் சமையல் எரிவாயு, டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர உணவு, மின்சாரம், உரம் என பலவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கிவருகிறது. இதன் காரணமாக மத்திய பட்ஜெட்டில் அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த சில அதிரடி முடிவுகளை மத்திய அரசு அண்மையில் எடுத்தது. அதன்படி, வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் எண்ணிக்கையில் புதிய கட்டுப்பாட்டினை விதித்தது.
மானிய விலையில் ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூடுதல் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மேலும் 3 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்க சோனியா ஆலோசனை வழங்கினார். கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் இதை பின்பற்றின.
பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ‘‘சிலிண்டர் கட்டுப்பாடு விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதம் காட்டாது. இதில் எண்ணெய் நிறுவனங்கள் சுயமாக முடிவு எடுக்கலாம். சாமான்ய மக்களின் கஷ்ட, நஷ்டங்களை மத்திய அரசு உணர்ந்துள்ளது’’ என தெரிவித்தார். தற்போது குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு கூடுதல் சிலிண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook