கேரளாவில் தியேட்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
திருவனந்தபுரம்: சேவை கட்டணத்தை உயர்த்த கோரி கேரளாவில் ‘ஏ கிளாஸ்’ தியேட்டர் உரிமையாளர்கள் இன்று (2ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். கேரளாவில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.2 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்கட்டண உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சேவை கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தவேண்டும் என்று ‘ஏ கிளாஸ்’ சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் கேரள அரசு கட்டணத்தை உயர்த்த மறுத்தது. இதையடுத்து தங்களது கோரிகையை வலியுறுத்தி நவம்பர் 2ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி இன்று 360 ‘ஏ கிளாஸ்’ தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று வெளியாகவிருந்த 4 படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் ‘பி கிளாஸ்’ தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த தியேட்டர்களில் இன்று வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டுள்ளன.