உலககோப்பை 20,20ல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. தொடர்ச்சியாக 3வது முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேற்றப்பட்டுள்ளது. 20,20 உலககோப்பை அறிமுகமான 2007ல் டோனி தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதித்து காட்டியது. இம்முறை அணி தோல்வியடைந்ததில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. கேப்டன் டோனி மற்றும் பயிற்சியாளர் வியூகங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வீரர்கள் தேர்வு, பவுலிங்கில் சரியான நேரத்தில் எந்த வீரரை பயன்படுத்துவது, பீல்டிங் செட் செய்வது ஆகியவற்றில் டோனி கடுமையான குழப்பம் அடைந்தார். ஒரே ஆட்டத்தில் துவக்க பவுலிங்கை 2 இடதுகை பந்துவீச்சாளர்களை கொண்டு ஏன் அவர் ஆடினார் என்பதும் புதிராக உள்ளது. பந்துவீச்சில் டோனி எந்தவித புதுமையையும் புகுத்தவில்லை. ஜாகீர்கானால் முன்புபோல் ஆக்ரோஷமாக பந்துவீச முடியவில்லை. சேவாக், காம்பீர் ஆகியோர் தொடர் முழுவதும் சொதப்பியுள்ளனர். சேவாக் சர்வதேச 20,20 போட்டிகளில் இதுவரை சோபித்ததில்லை. உடல்தகுதி பிரச்னையே அவருக்கு பெரிதாக உள்ளது. மேலும் சுழற்பந்துவீச்சும் எல்லா நேரத்திலும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் இல்லை. ஒட்டுமொத்தத்தில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வகையில் வீரர்கள் தேர்வும் அமையாததுதான் மிகப்பெரிய பிரச்னை. 20,20ல் விளையாடுவதற்கு அதிக உத்வேகமும், துடிப்பும் தேவை. இதனால் வரும் ஆட்டங்களிலாவது சீனியர் வீரர்கள் இளம் தலைமுறை வீரர்களுக்கு வழிவிட வேண்டும். சச்சின், கங்குலி, டிராவிட் எடுத்த துணிச்சலான முடிவை தற்போதுள்ள வீரர்களும் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேர்வு குழுவும், பிசிசிஐயும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அம்பாதிராயுடு, ரகானே, சவுரப்திவாரி, மனோஜ்திவாரி, முரளிவிஜய், மணீஷ்பாண்டே, உன்முகுந்த்சந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். மேலும் வேகப்பந்து வீச்சில் இளம்வீரர்களை கொண்டுவர வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook