கலர் பென்சிலில் கலை வண்ணம்
கிரான்வில்: கலர் பென்சிலால் ஓவியம் தீட்டுவது தெரியும். கலர் பென்சிலையே ஓவியமாக்குவது தெரியுமா? பென்சில்களை அடுக்கி வைத்து வண்ணமயமான ஓவியங்களை படைத்து அசத்துகிறார் ஒரு அமெரிக்கர். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் கிரான்வில் பகுதியை சேர்ந்த ஓவியக் கலைஞர் கிறிஸ்டியன் ஃபார். கிராவின் நகரில் உள்ள டெனிசன் பல்கலையின் கலை தொழில்நுட்ப துறை இயக்குனராக உள்ளார். கைதேர்ந்த ஓவியர். அதே நேரம், பொருட்களை வித்தியாசமான முறையில் பயன்படுத்தி கண் கவர் ஓவியங்கள் படைப்பதில் வல்லவர். கலர் பென்சில்களை வரிசையாக அடுக்கி ஓவியங்கள் உருவாக்குவது இவரது பொழுதுபோக்கு. இதுபற்றி அவர் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே, கலர் பொருட்களை அடுக்கி வைத்து ஓவியமாக்கி எல்லோரிடமும் காட்டுவேன். 2005-ல் என் மகளுக்கு வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு தர ஆசைப்பட்டேன். பல்வேறு வண்ணங்களில் நூற்றுக்கணக்கான கலர் பென்சில்களை வாங்கினேன். பிரத்யேகமாக ஒரு மரச்சட்டம் உருவாக்கி, அதன் பின்னணியில் முதலில் படத்தை வரைந்துகொண்டேன். கம்ப்யூட்டர் பயன்படுத்தி, அதே படத்தை ‘பிக்சல்’களாக (புள்ளி) மாற்றினேன். அதன் அடிப்படையில் முனைப்பகுதி மேலே தெரியுமாறு பென்சில்களை அடுக்கினேன். இதுபோல பல படங்களை உருவாக்கியுள்ளேன். இவ்வாறு கிறிஸ்டியன் ஃபார் கூறினார். படம், ஓவியம், போட்டோக்களை பார்க்கும்போது அதில் இடம்பெற்றுள்ள கலர் புள்ளிகள் நம் மனதில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அவர் தற்போது ஆராய்ச்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.