சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். தலைமை நிலைய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என்று சுமார் 270 பேருக்கு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கட்சி வளர்ச்சி பணிகள், கட்சி நிர்வாக சீரமைப்பு, நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகள், தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னை என்று பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு போயஸ்தோட்டத்தில் இருந்து கட்சி அலுவலகம் வரை வரவேற்பு பேனர்களும் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் மாதம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook