திருவொற்றியூர்: டேங்கர் லாரி டிரைவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். மணலி ஆயில் கம்பெனியில் நேற்றிரவு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணலி ஆண்டார்குப்பம் அருகே தனியார் ஆயில் கம்பெனி உள்ளது. இங்கு டேங்கர் லாரிகளில் ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மொத்தமாக ஆயில் ஏற்றி செல்லப்படுகிறது. மயிலாடுதுறையை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (26), ஆயில் ஏற்றி செல்வதற்காக டேங்கர் லாரியுடன் நேற்று மணலி வந்தார். இரவு 9 மணியளவில் டேங்கர் லாரியில் ஆயில் நிரப்பும் பணி நடந்தது. பிரகாஷ் நிறுத்தியிருந்த லாரியின் பின்னால் வேறு சில லாரிகள் ஆயில் நிரப்ப வரிசையில் காத்திருந்தன. ஆயில் நிரப்புவதற்காக டேங்கரை நிறுத்திவிட்டு, பிரகாஷ் டிபன் சாப்பிட அருகில் உள்ள கடைக்கு சென்றார். அவர் வருவதற்குள் ஆயில் நிரப்பப்பட்டு விட்டது. இதனால் பின்னால் நின்ற லாரியின் டிரைவரான புதுவண்ணையை சேர்ந்த சுரேஷ் (23), ஆயில் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை எடுத்து சற்று தூரத்தில் விட முயன்றார். லாரியை ஸ்டார்ட் செய்தபோது கியர் பாக்ஸ் உடைந்து டிரைவர் இருக்கை அருகே இருந்து புகை கிளம்பியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பிரகாஷ் அங்கு வந்தார். கியர் பாக்ஸ் உடைந்ததை பார்த்ததும் ஆத்திரமடைந்த அவர், ‘நான் இல்லாத நேரத்தில் என் லாரியை ஏன் இயக்கினாய்?’ என்று கேட்டு சுரேஷிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. சுரேஷுக்கு ஆதரவாக தண்டையார்பேட்டையை சேர்ந்த மற்றொரு டிரைவர் விஜயகுமார் பேசியுள்ளார். பிரகாஷை சுரேஷ் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. நிலைதடுமாறி கீழே விழுந்த பிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், பிரகாஷ் இறந்து விட்டதாக கூறினார். இதையறிந்ததும் டிரைவர்கள் சுரேஷ், விஜயகுமார் இருவரும் தலைமறைவாகி விட்டனர். தகவல் அறிந்ததும் மணலி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்து பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook