ஈரோடு: ஈரோட்டில் உணவு பூங்கா அமைக்க நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த் கூறினார். அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் மஞ்சள் விலை நிர்ணய அறிவிப்பு மாநாடு ஈரோட்டில் வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் மத்திய வேளாண் இணை அமைச்சர் சரண்தாஸ்மகந்த் பேசியதாவது: இந்தியாவில் 25 வகையான பொருட்கள் குறைந்தபட்ச ஆதாய விலை பட்டியலில் கொண்டுவரப்பட உள்ளது. இதே போல மஞ்சளுக்கும் கட்டுபடியான ஒரு விலையை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதே போல மத்திய அரசு விரைவில் ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது. இந்த திட்டத்தின் படி விளைபொருட்களுக்கான விலை கட்டுபடியாகாத போது மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் கொடுத்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய உள்ளது. ஈரோட்டில் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும். இவ்வாறு சரண்தாஸ்மகந்த் பேசினார்.
மாநாட்டில் அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, நடராஜன், லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், அஸ்லம்பாஷா, கொமுக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பா.ம.க. துணை பொதுப்செயலாளர் மகேந்திரன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook