புதுடெல்லி: வாரிசு வழக்கில் சிக்கிய ஆந்திர முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி, இது தொடர்பாக தன்னிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகளை, வழக்கு முடியும் வரை ரகசியமாக வைக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர முன்னாள் கவர்னர் என்.டி.திவாரிதான் தனது உண்மையான தந்தை என உ.பி.யைச் சேர்ந்த ரோகித் சேகர் என்பவர் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து திவாரியிடம் மரபணு சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் திவாரி அப்பீல் செய்தார். இது தள்ளுபடி செய்யப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி தர திவாரி மறுத்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ரோகித்சேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த மே 24ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரித்து, ரத்தமாதிரியை கொடுக்க திவாரிக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து போலீஸ் உதவியுடன் திவாரியிடம் ரத்தமாதிரி பெறப்பட்டு ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் சீலிட்ட உறையில் வைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.
சோதனை முடிவுகளை வழக்கு விசாரணை முடியும் வரை வெளியிடக் கூடாது என ஐகோர்ட்டில் திவாரி மனு தாக்கல் செய்தார். இதை கடந்த 20ம் தேதி ஐகோர்ட் தனிநீதிபதி விசாரித்து, தள்ளுபடி செய்தார். வரும் 27ம் தேதி (இன்று) மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முன்னிலையில் டிஎன்ஏ அறிக்கை பிரிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் ஐகோர்ட் முடிவை எதிர்த்து திவாரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடியும் வரை டிஎன்ஏ அறிக்கையை ரகசியமாக வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இதே போன்ற மனு, டெல்லி ஐகோர்ட் உயர் பெஞ்ச் முன்பும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook