சென்னை: சென்னையில் நேற்று மரணமடைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் உடலுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது. கறுப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி டிஜிட்டல் யுகமாகிவிட்ட இந்த காலம்வரை தமிழ் படங்களில் 6 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் காக்கா ராதாகிருஷ்ணன் (86). கடந்த சில வாரங்களாக உடல் நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் தியாகராய நகர் சிங்காரம் தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சிவகுமார், விவேக் மற்றும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
‘மங்கையர்கரசி’ என்ற படத்தில் அரசாங்க வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்று தாயிடம் கேட்பார் ராதாகிருஷ்ணன். அதற்கு அவர் ‘காக்கா’ பிடிக்க வேண்டும் என்று பதில் சொல்வார். உடனே மரத்தில் ஏறி காகத்தை பிடித்துக் கொண்டு அரசவைக்கு சென்று வேலை கேட்பார். அங்கிருப்பவர்கள் வேலை கிடையாது என்று கூறி அவரை விரட்டி விடுவார்கள். இந்த காட்சி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதையடுத்து அவரது பெயருக்கு முன்னால் ‘காக்கா’ என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது. தியாகராஜா பாகவதர், நவாப் ராஜமாணிக்கம், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம் உள்ளிட்டோரின் நாடக கம்பெனிகளில் சேர்ந்து 1000க்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த ‘சந்திரஹரி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எம்ஜிஆருடன் ‘தாய்க்கு பின் தாரம்’, சிவாஜியுடன் ‘மனோகரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமலுடன் ‘தேவர் மகன்’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, விஜய்யுடன் ‘காதலுக்கு மரியாதை’, அஜீத்துடன் ‘உன்னைத் தேடி’ உள்பட 500 படங்களில் நடித்திருக்கிறார். திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் பிறந்த இவருக்கு விசாலாட்சி, சாரதாம்பாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். 3 மகன், 5 மகள்கள், 15 பேரன், பேத்திகள் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook