மும்பை: பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக நிதின் கட்கரி மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்வாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த சஞ்சய் ஜோஷியை பதவியை விட்டு நீக்க வேண்டும் என மோடி வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் செயற்குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சஞ்சய் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிதின் கட்கரி, மோடியுடன் பேசினார். இதைத்தொடர்ந்து, செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் நேற்று பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‘மோடி புகழ்பெற்ற மனிதர். அவரை பிரதமர் வேட்பாளராக பாஜ அறிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை காரணமாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. நாளைய கூட்டத்தில் பங்கேற்பேன் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜ தலைமையை கடுமையாக விமர்சித்த எடியூரப்பா, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்ட அவர், இன்று காலை மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக பெங்களூர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக மக்கள் கட்கரி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவர் பாஜ தலைவராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவிக்க மும்பை செல்கிறேன். மாநில பாஜ பிரச்னையை செயற்குழு கூட்டத்தில் எழுப்ப மாட்டேன் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook