சென்னை: தொழிற்சாலை, வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்க ரூ.1000 கோடியில் குழாய் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் அறிக்கை சமர்ப்பித்து கூறியதாவது: புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்சாலைகளை தோற்றுவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன்மூலம் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அரசு இலக்கு. இந்த இலக்கை அடைய, எரிசக்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். பிற மாநிலங்களில் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பு இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்த வரை, எரிசக்தி தேவை நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களையே சார்ந்துள்ளன. கிருஷ்ணா, கோதாவரி படுகையில் இருந்து கிடைக்க பெறும் எரிவாயு, குழாய் கட்டமைப்பு உள்ள மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை பொறுத்த வரை ஆந்திர மாநிலத்துக்கு மட்டும்தான் எரிவாயு ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவின் பங்களிப்பு அவசியம். அதன் அடிப்படையில், அரசால் வெளியிடப்பட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ல் திரவ நிலை எரிவாயு முனையங்கள் அமைப்பது மற்றும் எரிவாயு வினியோக குழாய் இணை தொகுதிகள் அமைப்பது ஆகியவை எடுத்து சொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 5 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்ட 2 திரவ நிலை எரிவாயு இறக்குமதி முனையங்கள் தேவை. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் எண்ணூர் துறைமுகத்தின் அருகில், திரவ நிலை எரிவாயு இறக்குமதி முனையம் அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. வரும் 2016ம் ஆண்டில் இம்முனையம் செயல்படும் போது ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் டன் திரவ நிலை எரிவாயுவை இறக்குமதி செய்து அதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 18 மில்லியன் கனமீட்டர் எரிவாயுவை தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கும், தொழிற்சாலைகளுக்கும், வாகனங்களுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் வினியோகம் செய்ய இயலும்.
எரிவாயு வினியோகிக்க தேவையான குழாய் தொடரமைப்பு திட்டம் அவசியம் என்பதால், கெயில் நிறுவனமும், டிட்கோ நிறுவனமும் எரிவாயு ஒத்துழைப்பு செயல் திட்ட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. கெயில் நிறுவனம் கொச்சியில் நிறுவப்பட்டு வரும் திரவ எரிவாயு முனையத்தில் இருந்து எரிவாயுவை கொண்டு செல்லும் கொச்சி பெங்களூர் குழாய் தொடரமைப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை தொடங்கி உள்ளது. இக்குழாய் தொடரமைப்பில், 310 கி.மீ. நீளமுள்ள பகுதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக செல்லும். கெயில் நிறுவனம் தமிழ்நாடு வழியே செல்லும் இக்குழாய் தொடரமைப்பின் பாதையில் உள்ள தொழில் மையங்கள், போக்குவரத்து வாகனங்கள், நகர்ப்புறத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றுக்கு தேவையான எரிவாயுவை வினியோகம் செய்வதற்கான இணை குழாய் தொடரமைப்பு திட்டத்தை மேற்கொள்ளும். இந்த திட்டம் ரூ.1000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும்.
இந்த குழாய் தொடரமைப்பின் சேலம் முனையத்தில் இருந்து கடலூர் பகுதி வரை நாளொன்றுக்கு 6 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை அமைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். தென் மாவட்ட கடலோர பகுதியில், மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனையம் ரூ.2,500 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் கெயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். டிட்கோ நிறுவனம் இதற்கு தேவையான ஒத்துழைப்பை நல்கும். கொச்சி பெங்களூர் எரிவாயு குழாய் தொடரமைப்பில் கிடைக்கும் எரிவாயு மூலம் முதல் கட்டமாக 500 மெகா வாட் திறனுள்ள மின் உற்பத்தி திட்டம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதை நிறைவேற்ற டிட்கோவும், கெயில் நிறுவனமும் இணைந்து ஒரு கூட்டு துறை நிறுவனத்தை ஏற்படுத்தும். இந்த திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், உயர்தர உள்கட்டமைப்பு, பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போட்டியிட்டு வணிகம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை கொண்ட புதிய தயாரிப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும். முதல் கட்டமாக, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1500 ஏக்கர்; வேலூர் மாவட்டம் காட்ராம்பாக்கத்தில் 2000 ஏக்கர்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 4000 ஏக்கர் பரப்பளவில் புதிய தயாரிப்பு மண்டலங்கள் நிறுவப்படும். எண்ணூர் துறைமுகம் பகுதியின் முக்கியத்துவத்தை கருதி அங்குள்ள சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும். ஒரகடம் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி பொருட்களை எளிதில் அனுப்ப வசதியாக வடக்கு துறைமுக இணைப்பு சாலை அமைக்கப்படும். புதிதாக உருவாகும் இந்த சாலைகளுக்கு அருகில் சுமார் 1,000 ஏக்கரில் கனரக பொறியியல் தொழிற்சாலைகளுக்கான ஒரு பெரு மையம் உருவாக்கப்படும். தற்போது தமிழ்நாட் டில் முதலீடு செய்ய முன்வரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விரைந்து அளிக்க வசதியாக சுமார் 20,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.100 கோடி நிதியுடன் ‘தொழில் கட்டமைப்பு தொகுப்பு நிதி’ உருவாக்கப்படும். இந்த தொகுப்பு நிதியை உருவாக்குவதற்கு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ரூ.80 கோடியும் அரசு 20 கோடி நிதியும் அளிக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook