சென்னை: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் தேவைகளை பெற்றோர் அறிந்து கொள்ள ‘மாநில ஆதார வள மையம்’ அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் இன்று, விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து கூறியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளாக, கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேசமுடியாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சிக் குன்றியவர்கள், கற்றலில் குறைபாடு உள்ளவர்கள், மூளை முடக்குவாதததால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் உள்ளனர். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல், இந்த குழந்தைகளின் தேவைகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக, ‘மாநில ஆதார வள மையம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும்.
இந்த மையத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் சிறப்பு மருத்துவர்கள், வாழ்வியல் திறன் பயிற்சி வல்லுனர்கள், பேச்சு பயிற்சி வல்லுனர்கள் மற்றும் வெவ்வேறு குறைபாடுகளுக்கான ஆலோசகர்களின் தொழில் நுட்ப உதவிகளை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும். அரசால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், உதவித் தொகைகள் மற்றும் தேவையான உதவிகளை பெறுவதற்கு இந்த மையம் வழிவகை செய்யும். பல்வேறு குறைகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுவதற்குரிய மையங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள மாநில ஆதார வள மையத்தில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் அனைத்து மையங்களின் விவரங்களை தொகுத்து ஒரு கையேடு வெளியிடப்படும். இந்த மையத்தில் குழந்தைகளுக்கென பயன்படும் வகையில் தனியாக ஒரு நூலகம் அமைக்கப்படும். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் படிக்க முதல்கட்டமாக கோவை மாவட்ட மைய நூலகத்தில் ரூ.50 லட்சத்தில் தனிப்பிரிவு தொடங்கப்படும். இது, பிற மாவட்ட நூலகங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook