ஒசூர்: ஒசூர் அருகே நள்ளிரவில் திருமண விழாவில் பங்கேற்ற மாப்பிள்ளையின் நண்பர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட் டம் ஒசூர் அருகே கொம்மேபள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவரது மகன் மணி. இவருக்கு, ஒசூர் பத்திரசெட்டியில் உள்ள மண்டபத்தில் இன்று திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாப்பிள்ளையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று இரவே மண்டபத்தில் திரண்டனர். விழாவில், மாப்பிள்ளை மணியின் நண்பர்களான கொம்மேபள்ளியை சேர்ந்த விவசாயிகள் நரசிம்மா (25), சுரேஷ்ரெட்டி (35) ஆகியோரும் கலந்து கொண்டனர். நேற்றிரவு திருமண நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர். சிலர் தூங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் நரசிம்மாவும், சுரேஷ்ரெட்டியும் திருமண மண்டபத்தின் முன்பு காரில் அமர்ந்து பீர் அருந்திக் கொண்டிருந்தனர். போதை அதிகமானதும், திடீரென இவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ்ரெட்டி, பீர் பாட்டிலால் நரசிம்மாவின் தலையில் பலமாக அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நரசிம்மா கீழே சரிந்தார்.
இதைப் பார்த்ததும் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நரசிம்மாவை அங்கிருந்தவர்கள் பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக, இன்று காலை ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது. நரசிம்மாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்து கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. நரசிம்மாவுக்கு பத்மா என்ற மனைவியும், 3 மாத குழந்தையும் உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய சுரேஷ்ரெட்டியை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் இன்று காலை நிச்சயித்தபடி மணிக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் சோகத்துடன் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook