மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய உள்நாட்டு, பன்னாட்டு முனையங்கள் மற்றும் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டுகள் வைத்து, வரும் 12ம் தேதிக்குள் வெடிக்க செய்வோம் என்று கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனருக்கு ஒரு மர்ம மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து, நேற்றிரவு முதல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கு, 4 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது. அது, 7 அடுக்காக உயர்த்தப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், விமான நிலைய போலீசாரும் தனித்தனியே இந்த பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கார் பார்க்கிங், போர்ட்டிகோ பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நுழைவு வாசலிலேயே நிறுத்தி சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். தேவையில்லாமல் வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் 2 முறையும், விமானத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் சந்தேகப்படுபவர்களிடமும் சோதனை நடத்தப்படுகிறது. திரவப் பொருட்கள் எடுத்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலமும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த சோதனைக்காக விமான நிலையத்தில் கூடுதல் போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குண்டு மிரட்டல் வந்துள்ளதால் போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வரும் 13ம் தேதி வரை விடுமுறை இல்லாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி விமான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மர்ம கடிதம் காரணமாக விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அச்சப்பட தேவையில்லை. வரும் 13ம் தேதி வரை கண்காணிப்பு நீடிக்கும்Õ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook