மதுரை: மதுரையில் பா.ஜ. 5வது மாநில மாநாடு இன்று காலை துவங்கியது. இதில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேசுகின்றனர். தமிழக பா.ஜ. 5வது மாநில மாநாடு தாமரை சங்கமம் என்ற பெயரில் மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் இன்று காலை துவங்கியது. இரு நாட்கள் நடக்கும் இம்மாநாட்டை தேசியத் தலைவர் நிதின் கட்கரி கட்சிக் கொடியேற்றி துவக்கி வைத்தார். மாநில செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பா.ஜ. தலைவர்கள் வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ராம்லால், சதீஷ், முரளிதர்ராவ், இல.கணேசன், நிர்மலா சீதாராமன், கே.என்.லெட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே தொண்டர்கள் வாகனங்களில் குவிந்து வருகின்றனர். மாநாட்டு முகப்பில் பாராளுமன்ற கட்டிடம், தமிழக சட்டசபை, மாநாட்டு அரங்கிற்குள் ஒரு லட்சம் பேர் அமரும் வசதியுள்ள பந்தல், பா.ஜ. வளர்ச்சி குறித்த படக்காட்சிக் கூடம், தமிழ்தாய் சிலையுடன் 160 அடி நீள, 50 அடி அகல மேடை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பா.ஜ .மூத்த தலைவர் அத்வானி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தனி விமானத்தில் மதுரை வருகிறார். மாலையில் மாநாட்டில் பேசும் அவர், இரவு 8 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மாநாட்டு பந்தலை சுற்றிலும் ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வளாகம் முழுவதிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநாட்டு பந்தலில் திடீர் தீ: பாஜ மாநாடு துவங்கிய சிறிது நேரத்தில் மாநாட்டின் அலங்கார பந்தலின் ஒருபகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட தொண்டர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் தொண்டர்களை அமைதிப்படுத்தினர். பந்தலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வயரிலிருந்து ஏற்பட்ட கசிவால் தீப்பற்றியது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook