இங்கிலாந்தில் பயங்கரம் நான்கு மாத கர்ப்பிணி குத்திக் கொலை
லண்டன்: இங்கிலாந்தில் ஆசியாவை சேர்ந்த முஸ்லிம் இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த அந்த பெண் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ரோச்டேல் பகுதியில் வசித்தவர் சைபா கதூன். மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வயது 26. இவருக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் இருக்கிறான். இரண்டாவது முறையாக கருவுற்றார். இருவருடைய டாக்டர் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த சைபா, அவரது இல்லத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தனது இல்லத்தில் மகனுடன் நேற்றுமுன்தினம் இரவு சைபா உறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் புகைமூட்டம் ஏற்பட்டது. மூச்சுத் திணறி எழுந்த மகன், தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து வீட்டில் இருந்து அலறி கொண்டு வெளியில் ஓடிவந்தான்.
சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். சைபா கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சைபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக டாக்ஸி டிரைவர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர் சைபாவின் பாய் பிரண்ட்டாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.