புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான சட்ட திருத்தத்துக்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா, ஆந்திர முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படை சட்டப்படி பிஎஸ்எப் வீரர்களை நாட்டின் எல்லைப்பகுதிகளில் மட்டுமே பாதுகாப்பு பணியில் நிறுத்த முடியும். ஆனால் அண்மைக்காலமாக மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள சட்டீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சந்தேகப்படும் நபர்களை கைது செய்து விசாரிக்கும் சிறப்பு அதிகாரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு உள்ளது. இந்த அதிகாரத்தை அவர்கள் இதுவரை எல்லை பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
எல்லை பாதுகாப்பு வீரர்களை உள்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சட்டம் அனுமதிக்காத போது, அவர்களுடைய கைது அதிகாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதை தொடர்ந்து உள்நாட்டிலும் எல்லை பாதுகாப்புபடை வீரர்களை பணியில் அமர்த்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜ. ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5ம் தேதி டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆந்திர, மகாராஷ்டிர முதல்வர்களும் எல்லை பாதுகாப்பு படை சட்டத்தில் திருத்தம் செய்ய எழுத்து மூலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook