நடப்பு கூட்ட தொடரில் கருப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல்: பிரணாப் முகர்ஜி உறுதி
புதுடெல்லி: கருப்பு பணம் தொடர்பான வெள்ளை அறிக்கை நடப்பு கூட்டத்தொடரின் இறுதி கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் நேற்று உறுதி அளித்தார். மக்களவையில் கடந்த இரண்டு நாட்களாக நிதி மசோதா மீது விவாதம் நடந்தது. நேற்று உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. முன்னதாக பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தின் அளவு குறித்து 3 அமைப்புகள் மதிப்பீடு செய்து வருகின்றன. இதன் அறிக்கை மத்திய அரசுக்கு கிடைத்தவுடன் கருப்பு பணம் தொடர்பான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள சிலரைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன் அவர்கள் பற்றிய விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்றார்.