அபிஷேக் சிங்வி குறித்து கருத்து : அன்னா ஹசாரேக்கு சட்ட அமைச்சர் பதிலடி
சண்டிகர் :பெண் உதவியாளருடன் சிடி சர்ச்சையில் சிக்கிய அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும் என்று கூறிய அன்னா ஹசாரேவுக்கு சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராகவும் இருந்த அபிஷேக் சிங்வி, தனது பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடிக்கள் கடந்த மாதம் சமூக வலை தளங்களில் வெளியானது. இது போலி என்று அபிஷேக் சிங்வி மறுத்தார். டெல்லி கோட்டில் வழக்கு தொடர்ந்து சிடியை வெளியிட தடை வாங்கினார். இதற்கிடையில், காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று நிலைக்குழு தலைவர் பதவி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், சிங்வி குறித்து கருத்து கூறிய சமூக சேவகர் அன்னா ஹசாரே,
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போராட வேண்டும் என்றார். அன்னாவின் கருத்துக்கு சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலடி கொடுத்துள்ளார். சண்டிகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் அன்னாவை மதிக்கிறேன். நான் சட்ட அமைச்சர். எனக்கு தெரிந்தளவில் அரிதிலும் அரிதான வழக்குகள், அதிலும் குறிப்பாக கொலை தொடர்பான வழக்குகளில்தான் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும். யாருக்காவது சட்டம் பற்றி இன்னும் அதிகம் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.