மியான்மர் ஜனநாயக தலைவர் : ஆங் சான் சூசி நாளை பதவியேற்பு
யாங்கூன்: மியான்மர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூசி நாளை பதவியேற்கிறார். மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி பார்லிமென்ட் இடைத்தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூசி (66), காவ்மு தொகுதியில் போட்டியிட்டார். 45 இடங்களில் சூசி கட்சியினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், சூசி மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் பதவியேற்க திடீரென நிபந்தனை விதித்தனர். மியான்மரில் பதவியேற்பின் போது, Ôஅரசியல் சட்டத்தை பாதுகாப்பேன்Õ என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும். இதை ‘அரசியல் சட்டத்தை மதிப்பேன்Õ என்று கூறி உறுதிமொழி எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூசி நிபந்தனை விதித்தார். Ôஅரசியல் சட்டத்தை பாதுகாப்பதாகÕ உறுதிமொழி கூறி பதவியேற்றால், அதையே காரணமாக வைத்து கட்சியின் ஜனநாயக போராட்டங்களுக்கு தடை விதிக்கலாம் என்று சூசி கருதுகிறார். அதனால் பதவியேற்பு தள்ளி போனது.
இந்நிலையில், சூசியும் அவரது எம்.பி.க்களும் நாளை பார்லிமென்டில் பதவியேற்க முன்வந்துள்ளனர். பதவியேற்பு நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த கோரிக்கையை கைவிடவும் இல்லை. அரசியல் என்பது விட்டு கொடுத்து போவதுதான். மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே நாங்கள் செயல்படுகிறோம் என்று சூசி கூறியுள்ளார்.