10 வயது மகனை கைதியாக்கி கொடுமைப்படுத்திய தாய்
லண்டன்: இங்கிலாந்தின் லான்கே ஷயர் நகரை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். இவர் 40 வயதுக்காரர் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் மகன் அடிக்கடி சேட்டை செய்வதும், சமையல் அறையில் உள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிடுவதும் அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை. அதற்காக மகனை நிலக்கரி சேமிக்கும் அறையில் தள்ளி கொடுமைபடுத்தி உள்ளார். தகவல் கிடைத்து போலீசார் சிறுவனை மீட்டனர். இதுகுறித்து புலனாய்வுத் துறை போலீஸ் கான்ஸ்டபிள் மட் நார்மன்டன் கூறுகையில், சிறையில் உள்ள செல்லை விட மிக சிறிய அறையில் சிறுவன் கைதியாக்கப்பட்டுள்ளான். பல மணி நேரம் அடைந்து கிடந்த போது சுவரை சுரண்டி சுரண்டி பொழுது போக்கி உள்ளான்.
அறையில் துர்நாற்றம் வீசியது. பீங்கான் குடுவை முழுவதும் சிறுநீர் நிரம்பி இருந்தது. இதுபோல் குழந்தையை சித்ரவதை செய்ததை இதற்கு முன் பார்த்ததில்லை, கேள்விப்படவும் இல்லை என்றார். இதுதொடர்பான வழக்கு பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்தோணி ரஸ்ஸல், வழக்கின் தீர்ப்பு மே 18ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சிறுவனின் எதிர்காலம் கருதி, யாருடைய பெயரும் வெளியிடப்படவில்லை.