ஐபிஎல் சீசன் 5 போட்டியில் நேற்று கட்டாக்கில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 50, பட்டேல் 23, டும்னி 16, சங்ககரா 12 ரன் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் நரேன், பாலாஜி தலா 2, பிரெட்லீ, பாட்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதன்பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மெக்குலம் 10, காம்பீர் 30 (28 பந்து, 4 பவுண்டரி), பிஸ்லா 10, காலிஸ் 23, யூசுப்பதான் 6, மனோஜ்திவாரி 30 (28 பந்து, 2 பவுண்டரி), தாஸ் 9 ரன் எடுத்தனர்.
ஐதராபாத் தரப்பில் ஸ்டெய்ன் 2, அங்கீத்சர்மா, அமீத்மிஸ்ரா, ஆனந்த்ராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது 4 ஓவர் வீசி 15 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய பிரெட்லீக்கு வழங்கப்பட்டது. ஐதராபாத் அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ளது. அத்தனை ஆட்டங்களிலும் தோல்வியே பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது.
கேப்டன்ஸ் கார்னர்
காம்பீர்: ஆடுகளம் மெதுவாக இருந்தது. ஐதராபாத் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஆனாலும் மனோஜ்திவாரி உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று தந்தனர்.
சங்ககரா: நாங்கள் நல்லமுறையில்தான் தொடங்கினோம். அதேவேகத்தில் சென்றிருந்தால் 150 ரன்கள் எடுத்திருப்போம். ஆனால் கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக பீல்டிங் மற்றும் பவுலிங் செய்தனர். எனவே அவர்களே வெற்றி பெற்றனர்.
ஹீரோ கார்னர்
ஆட்டநாயகன் விருதுபெற்ற பிரெட்லீ கூறுகையில், ஆடுகளம் பந்து வீசுவதற்கு வசதியாக இருந்தது. புதிய பந்தில் பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடிந்தது. 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதியிருப்பதால் மற்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook