ஒசூர் :ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லட்சக்கணக்கில் சூதாட்டம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சூதாட்ட கும்பல் ஒசூரில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் 5,வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சென்னை, மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத், பஞ்சாப் ஆகிய 9 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி, ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டேடியங்களில் தினமும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த சீசனின் இறுதிப் போட்டியின்போது சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போதும் சூதாட்ட கும்பல் கோடிக்கணக்கில் பணம் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள லாட்ஜிகளில் தங்கி,
சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒசூர் டவுன் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒசூர் பகுதியில் உள்ள பெரிய லாட்ஜ்களில் நேற்று முதல் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 2,வது நாளாக இன்றும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களின் பட்டியலை வாங்கி, அவர்களை பற்றிய விவரங்களை விசாரிக்கின்றனர். இதுகுறித்து ஒசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் கூறும்போது, ‘’கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். போலீசார் மப்டியில் லாட்ஜ்களில் ரகசியமாக கண்காணித்து, சூதாட்ட கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook