கோபி :ரியல் எஸ்டேட் அதிபர்களை வீட்டில் சிறைவைத்து தாக்கி, ரூ.1.25 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கொலக்கம்பையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(65). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் குன்னூரை சேர்ந்த அமல்ராஜ்(42), சென்னை போளூரை சேர்ந்த போஜன் ஆகியோருடன் சேர்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த தாழைக்கொம்பு புதூரை சேர்ந்த முனுசாமி(38), என்பவர் சுந்தர்ராஜனை தொடர்பு கொண்டு, அங்கு குறைந்த விலைக்கு வீட்டுடன் கூடிய நிலம் உள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பிய சுந்தர்ராஜன், அமல்ராஜ், போஜன் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாழைக்கொம்பு புதூருக்கு வந்தனர். முனுசாமியும், அவரது நண்பர் மணியும் 3 பேரையும் காரில் அழைத்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த பழைய வீட்டை காண்பித்தனர். வீட்டின் உள்ளே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் திடீரென சுந்தர்ராஜன், அமல்ராஜ், போஜன் ஆகியோரை பிடித்து கட்டி போட்டனர். தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என கூறி அடையாள அட்டையை காட்டிய அவர்கள், 3 பேரும் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், ரூ.3 லட்சம் கொடுத்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளனர். பணம் தராவிட்டால் மான்கொம்பு கடத்தியதாக வழக்கு போட்டு சிறையில் அடைப்போம் என மிரட்டியுள்ளனர்.
அதற்கு 3 பேரும் தற்போது பணம் இல்லை என கூறியுள்ளனர். இதையடுத்து 7 பேரும் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பயந்து போன சுந்தர்ராஜன், அமல்ராஜ், போஜன் ஆகியோர் தங்கள் வீடுகளுக்கு போன்செய்து, வங்கி கணக்கில் பணம் போடும்படி கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் பணம் போட்டதும், சுந்தர்ராஜன் கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம், அமல்ராஜ் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டுமூலம் எடுத்துக்கொண்டனர். கையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டனர். மீத பணத்தையும் தரவேண்டும் என கூறி, தொடர்ந்து 2 நாட்கள் அடைத்து வைத்தனர். நேற்று மாலை முனுசாமியும், கும்பலும் வெளியில் சென்றபோது, 3 பேரும் கட்டுகளை அவிழ்த்து சுவர் ஏறி குதித்து தப்பினர். கோபி போலீசில் புகார் செய்தனர். தனிப்படை தீவிர விசாரணை நடத்தி, தாழைக்கொம்பு புதூரில் பதுங்கி இருந்த முனுசாமி கும்பலை சுற்றி வளைத்தனர். முனுசாமியும், அருள்ராஜ்(34) என்பவரும் பிடிபட்டனர். ராமசாமி, கருப்புசாமி, செந்தில், முருகானந்தம், மணி ஆகிய 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், இவர்கள் போலீஸ் அதிகாரி போல் நடித்து பலரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. தப்பிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook