ராய்ப்பூர் :சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட கலெக்டரை மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கலெக்டரை விடுவிக்க நக்சல்கள் நிபந்தனைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் குழப்பம் நீடிக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. ஒடிஷாவில் கடத்தப்பட்ட ஆளும்கட்சி எம்எல்ஏவின் கதி என்னவென்று தெரியாத நிலையில், நக்சல்களால் கலெக்டர் கடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஷா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் கடந்த மாதம் 14&ம் தேதி இத்தாலி சுற்றுலா பயணிகள் 2 பேரை நக்சல்கள் கடத்தினர். அவர்களை விடுவிக்க சிறையில் இருக்கும் நக்சல்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அரசுக்கும் நக்சல்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோதே ஒருவர் விடுவிக்கப்பட்டார். நீண்ட இழுபறிக்கு பிறகு மற்றொரு இத்தாலியரும் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ ஜினா ஹிகாகாவை கடந்த மாதம் 23&ம் தேதி நக்சல்களின் மற்றொரு பிரிவினர் கடத்தினர். எம்எல்ஏ கடத்தப்பட்டு ஒரு மாதமான நிலையில்,
அவரது கதி என்னவென்று தெரியவில்லை. அவரை மக்கள் கோர்ட்டில் நிறுத்தப் போவதாக நக்சல்கள் தெரிவித்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை நேற்று மாலை நக்சல்கள் கடத்தி உள்ளனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட கலெக்டர், தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சட்டீஸ்கரில் சுக்மா என்ற புதிய மாவட்டம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதல் கலெக்டராக அலெக்ஸ் பால்மேனன் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின், நக்சல் இயக்கத்தில் கிராம மக்கள் சேர்வதை தடுக்க பல நலத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். கிராம சுவராஸ் அபியான் என்ற பெயரில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, கேரலபால் பகுதியில் உள்ள மஜ்ஹிபாரா கிராமத்தில் நேற்று மக்களை சந்தித்து பேசினார் அலெக்ஸ். நிகழ்ச்சியை முடித்துவிட்டு பைக்கில் திரும்பும்போது அலெக்ஸை நக்சல்கள் கடத்தினர். அவருடன் வந்த 2 பாதுகாவலர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தகவல் உடனடியாக முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் கடத்தப்பட்ட இடம், ஒடிஷாவின் மால்கன்கிரி மற்றும் ஆந்திராவின் கம்மம் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்த 3 பகுதிகளும் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்தவை.
நக்சல் இயக்கத்தின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அலெக்ஸ் செயல்பட்டதால், அவரை கடத்தியதாக தெரிகிறது. சுக்மா மாவட்டத்தின் கேரலபால், அடர்ந்த காட்டுப் பகுதிகள் நிறைந்தது. இங்கு ஏராளமான கண்ணிவெடிகளை நக்சல்கள் புதைத்து வைத்துள்ளனர். அதனால் பாதுகாப்புப் படையினர் அங்கு எளிதில் நுழைய முடியாது. அந்த காட்டுப் பகுதியில்தான் கலெக்டரை நக்சல்கள் சிறை வைத்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். கலெக்டரை பத்திரமாக மீட்பது தொடர்பாக முதல்வர் ராமன் சிங், உள்துறை அமைச்சர் நான்கி ராம் கன்வர், டிஜிபி ஏ.எம்.நவானி, கூடுதல் டிஜிபி ராம் நிவாஸ் மற்றும் உயரதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். கலெக்டரை கடத்திய நக்சல்கள் யார், அவர்களின் கோரிக்கை என்ன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியாததால் அவரை மீட்பதில் குழப்பம் நீடிக்கிறது. எனினும், சுக்மா மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்த ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டிஎஸ்பி அபிஷேக் சாண்டில்யா தலைமையில் போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கை போனில் தொடர்பு கொண்டு, நிலைமையை விசாரித்தார். கலெக்டரை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார். ‘‘நக்சல்களிடம் இருந்து தகவல் வந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக காத்திருக்கிறோம்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook