கடந்த 102 நாளில் ஹெல்மட் அணியாத குற்றம் 1.84 லட்சம் வழக்குகள் பதிவு
சென்னை : சென்னையில் கடந்த 102 நாளில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 1.84 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பைக்கில் செல்கிறவர்கள் அதிக விபத்தில் சிக்குகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மட் அணியாமல் செல்வதால் உயிரிழப்பது தெரிய வந்தது. விபத்துகளை தடுக்கவும், உயிர் பலிகளை தடுக்கவும் சென்னையில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் சுமார் 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. சென்னையில், கடந்த ஜனவரி முதல் 102 நாளில் ஹெல்மட் அணியாமல் சென்ற 1.84 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1.59 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டும் ஹெல்மட் அணியாமல் செல்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று போலீசார் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.