புதுடெல்லி : பதினான்கு மாநிலங்களில் 58 உறுப்பினர்களுக்கான ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்குவங்கம், ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மொத்தம் 58 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து அந்தந்த மாநில சட்டசபை செயலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22. மாநிலங்களவை தேர்தலுடன் பீகார் மாநில மேலவை தேர்தலும் அதே தேதியில் நடத்தப்படுகிறது. பா.ஜ.வில் அருண்ஜெட்லி, ஹேமமாலினி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி வரும் ஏப்ரலுடன் முடிவடைகிறது. இதில் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி ஆகியோரது பதவிக்காலமும் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook