மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்
பெங்களூர் : கர்நாடக மாநில சுற்றுலா துறை முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சுரங்க மோசடி வழக்கு தொடர்பாக இன்று பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை சிபிஐ போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக அவர் ஐதராபாத் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் அவர் சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கடந்த வாரம் பெங்களூர் சிபிஐ கோர்ட் உத்தரவிட்டது. ஐதராபாத் சிறையிலிருந்து பெங்களூர் அழைத்துவர டிரான்சிட் வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஐதராபாத் சிறை அதிகாரிகளிடம் இந்த வாரன்ட் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து காரில் அல்லது விமானத்தில் அவரை பெங்களூர் அழைத்து வர சிபிஐ முடிவு செய்தது. விமானத்தில் அழைத்துச் செல்ல உத்தரவிட வேண்டும் என ஐதராபாத் சிபிஐ கோர்ட்டில் நேற்று ஜனார்த்தன ரெட்டி மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு கார் மூலம் ஜனார்த்தன ரெட்டி பெங்களூர் கொண்டுவரப்பட்டார். ரகசிய இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். காலை 11.30 மணிக்கு பெங்களூர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. கோர்ட் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அவர் உடனடியாக பெல்லாரி கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது.