உ.பி. இறுதிகட்ட தேர்தல்: 60 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் இறுதி கட்டமாக நாளை 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உ.பி. சட்டமன்றத் துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன. இதில் சராசரியாக 59 சதவீத வாக்குகள் பதிவாயின. இறுதி கட்டமாக நாளை பிஜ்னோர், மொராதாபாத், பீம்நகர், ராம்பூர், ஜோதிபா புலே நகர், படாவுன், பரேலி, பில்பித், ஷாஜகான்பூர் மற்றும் லக்கிம்பூர் கேரி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 962 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 100 பேர் பெண்கள். சுமார் 1.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 18 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 500 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மக்கள் சுதந்திரமாகவும், தைரியமாகவும் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவா மாநிலத்திலும் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.