பெங்களூர் : பெங்களூரில் 100 ஆண்டுகள் பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 400 கடைகள் எரிந்து நாசமானது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவாஜி நகர் அன்னை ஆரோக்கிய மாதா ஆலயம் அருகே 100 ஆண்டுகள் பழமையான ரசூல் மார்க்கெட் உள்ளது. மளிகை, காய்கறி, பழங்கள், வீட்டு சாதன பொருட்கள் என 400-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மார்க்கெட்டில் எப்போதும் கூட்டம் அலைமோதும். சிவாஜி நகர் பஸ் நிலையம், ஆரோக்கியமாதா ஆலயம், மார்க்கெட் என 3 முக்கிய இடங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். மார்க்கெட்டில் தினமும் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரசூல் மார்க்கெட்டில் திடீரென்று தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென எல்லா பகுதிகளுக்கும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளிகள், உடனடியாக தீயணைப்பு துறைக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். 25-க்கும் அதிகமான வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிரமாண்ட கிரேன் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மார்க்கெட்டில் இருந்த 400 கடைகளும் எரிந்து சாம்பலாயின. கடைகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின. தீ விபத்து நடந்த மார்க்கெட்டை போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்தி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சுனில்குமார், தொகுதி எம்எல்ஏ ரோஷன் பேக் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்யும் சபீக் உல்லா கூறும்போது, ‘‘இந்த மார்க்கெட்டில் இதுவரை எந்த தீ விபத்தும் ஏற்பட்டதில்லை. இதுதான் முதல்முறை. இங்கு சுமார் 1400 பேர் வேலை செய்கின்றனர். தீ விபத்தால் வியாபாரிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு அரசு உரிய நஷ்டஈடு தரவேண்டும். எரிந்த கடைகளை மீண்டும் அரசே கட்டித் தரவேண்டும்’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook