ஐதராபாத் : ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சட்ட விரோதமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை எதிர்த்து ஐகோர்ட்டில் சந்திரபாபு நாயுடு அப்பீல் செய்கிறார். முதல்வராக இருந்தபோது, சட்ட விரோதமாக சொத்து குவித்ததாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் உதவியாளர்கள் உள்பட 12 பேர் மீது ஜெகன்மோகன் ரெட்டியின் அம்மாவும் எம்எல்ஏவுமான விஜயலட்சுமி ஐகோர்ட்டில் புகார் கொடுத்தார். அதுகுறித்த ஆவணங்களையும் மனுவில் இணைத்திருந்தார்.
இந்த மனுவை கடந்த 14ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஐகோர்ட், குற்றசாட்டுகள் குறித்து சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் செபி விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொங்கி உள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட தெலுங்கு தேச தலைவர்கள் ரமேஷ், நாகேஷ்வர ராவ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இதனை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யுமாறு கூறியது. அவர்கள் இன்று ஐகோர்ட்டில் மனு செய்கிறார்கள்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கோர்ட்டில் மனு செய்ய கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். முதலில் மறுத்த சந்திரபாபு நாயுடு, பின்னர் ஒப்புக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சிபிஐ விசாரணையை எதிர்த்து சந்திரபாபு நாயுடு ஐகோர்ட்டில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்வார் என என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook